PUDHIYATHALAIMURAI

SCIENCE & SOCIAL MATERIAL

SURA TET MATERIAL

ENGLISH

Monday, April 15, 2013

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?


மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.


இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய இரு வகையினரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் தேர்வு:கடந்த ஆண்டு, ஜூலை, 12ம் தேதி, முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.72 லட்சம் தேர்வர் பங்கேற்ற போதிலும், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். அதாவது, வெறும் 2,448 பேர் மட்டுமே, அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.கடினமான கேள்வித்தாள், குறைவான நேர ஒதுக்கீடு ஆகியவற்றால் திணறிய தேர்வர்கள், டி.ஆர்.பி., மீது சரமாரி புகார் தெரிவித்தனர். இதனால், அக்., 14ம் தேதி நடத்திய இரண்டாவது டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளில் கடினத்தை குறைத்ததுடன், தேர்வுக்கான நேரத்தை, ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக உயர்த்தியது.

இரண்டாவது தேர்வில் ஆறுதல்:இதன் காரணமாக, தேர்ச்சி, 3 சதவீதமாக அதிகரித்தது. 6.56 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், 19 ஆயிரத்து 246 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாள் தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மற்றும் இரண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு டிசம்பரில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அடுத்த தேர்வு எப்போது? எனினும், இன்னும், 20 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, மூன்றாவது டி.இ.டி., தேர்வை, வரும் மே மாதத்திற்குள் நடத்தி முடித்து, ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், புதிய ஆசிரியர்கள், பணியில் சேரும் வகையில், முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.,யின் மெத்தனம் காரணமாக, இத்திட்டம், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.தேர்வர்களும், அடுத்த டி.இ.டி., தேர்வை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தினமும், ஏராளமான தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), விசாரித்தபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., தரப்பில், எவ்வித தகவலும் தரப்படவில்லை.

டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் தேதிக்கும், தேர்வு நடக்கும் தேதிக்கும், குறைந்தபட்சம், இரண்டரை மாதங்கள் இடைவெளி இருக்கும் வகையில், தேர்வு அட்டவணையை நிர்ணயிப்போம். ஜூன், அல்லது ஜூலையில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என, தெரிவித்தன.

மாணவர்களுக்கு பாதிப்பு:இரண்டாவது தேர்வு நடந்து, ஆறு மாதங்கள் ஆகின்றன. மே மாதத்தில் தேர்வை நடத்தி, விரைவாக முடிவை வெளியிட்டுருந்தால், புதிய ஆசிரியர்கள், பள்ளியில் சேர வசதியாக இருந்திருக்கும். ஜூலைக்குப் பின், தேர்வை நடத்தினால், அவர்கள், பணியில் சேர்வதற்குள் அரையாண்டு தேர்வே வந்துவிடும். இதனால், கல்வி ஆண்டு துவங்கி, முதல் ஆறு மாதங்கள், ஆசிரியர் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அடுத்தகட்ட தேர்வை, டி.ஆர்.பி., விரைவாக வெளியிட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17

இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34


CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு

CTET சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு 
 
          மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஆசிரியர்களாகப் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதுவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது 
 
           கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக சேர விரும்புபவர்கள் மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். சண்டீகர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் அண்ட் டையூ, தாத்ரா அண்ட் நாகர்ஹவேலி, என்சிடி (தில்லி) ஆகிய யூனியன் பிரதேச நிர்வாகப் பகுதிக்குள் வரும் பள்ளிகளில் ஆசிரியர்களாக விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். 
 
          தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில், பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 
 
          ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுபபு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாவது தாளை எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஜூலை 28-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் தாள் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெறும். 
 
         ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், சீனியர் செகண்டரி, அதாவது பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தொடக்கக் கல்வி டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் தொடக்கக் கல்வி இளநிலைப்பட்ட (பி.இஎல்.எட்) வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சிறப்புக் கல்வியில் டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
 
          ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள், பட்டப் படிப்பை முடித்த பிறகு, தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பிஎட் படிக்கும் மாணவர்களும் என்சிடிஇ விதிமுறைகளின்படி பட்டப் படிப்பில் 45சதவீத மதிப்பண்களுடன் தேர்ச்சி பெற்று பிஎட் படிக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 
 
          சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிஏஎட், பிஎஸ்சிஎட் நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஓராண்டு பிஎட் (சிறப்புக் கல்வி) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதி ஆண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினார், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண்களின் 5 சதவீத விலக்கு உண்டு. கல்வி தொடர்பான பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். பிஎட் சிறப்புக் கல்விப் படிப்பு, இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 
 
               இந்தத் தகுதித் தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாளை எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. இரண்டு தாள்களையும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. விண்ணப்பிப்பதற்கான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசித் தேதி 16-4-2013.

 விவரங்களுக்கு: www.ctet.nic.in

No comments:

Post a Comment